Admin•••1
avatar
Admin
28/11/2016, 11:42 pm
தன்னம்பிக்கை என்றால் என்ன? Self10

பல காலங்களாக நமது மக்கள் பலர் எதற்கெடுத்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்... முயற்சி வேண்டும்... தன்னம்பிக்கையோடு போராட வேண்டும்... என்றெல்லாம் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் திறமையோடு முன்னேற நினைத்தால் அதற்கு முட்டுக்கட்டையும் போடுகிறார்கள்! அப்படியானால் தன்னம்பிக்கை என்பதை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? இல்லை முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? என்பது புரியவில்லை.

சரி, தன்னம்பிக்கை என்றால் என்ன? ஒரு சிலர், ஏதாவது ஒன்று நடந்த பிறகுதான் அதைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் ஒரு தன்னம்பிக்கையாளன் என்பவன் "இதை செய்தால் இதுதான் விளைவு!" என்று சிந்தித்துப் பார்த்து விட்டுதான் அதை செய்யவே தொடங்க வேண்டும். அதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. ஒன்றை செய்தால் அதில் நான் வெற்றி பெறுவேன். அல்லது இப்படிப் பேசினால் மற்றவர்கள் அதை இவ்வாறுதான் புரிந்து கொள்வார்கள் என்று தெரிந்து செய்வதுதான் தன்னம்பிக்கை!

ஒரு செயலை செய்துவிட்டு அதற்கு மற்றவர்களின் பாராட்டை எதிர்பார்த்திருந்தால். அது தன்னம்பிக்கை இல்லை. யாரும் பாராட்டவில்லையே என்று கவலைப்பட்டால் அந்த செயலை செய்ததற்கான தகுதியே நமக்கில்லை என்றுதானே பொருள்? ஏனென்றால் தான் செய்யும் செயல் சிறந்ததா? இல்லையா? என்பதைக்கூட அறிந்திருக்கவில்லை என்றால் நாம் எதற்காக அந்தச் செயலை செய்ய வேண்டும்? தன்னம்பிக்கை என்பது மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ளும் விஷயமல்ல. அது தன்னைப்பற்றித் தானே அறிந்து கொள்ளும் ஆற்றல்! தன்னைப் பற்றி தனக்கே தெரியவில்லை என்றால் அவனுக்கு தன்னம்பிக்கை எங்கிருந்து வரும்? நான் இப்படிப் பட்டவன்... எனக்கு இதெல்லாம் முடியும்... இந்த வழிகளில் எல்லாம் எனது திறமையை பயன்படுத்துவேன் அல்லது இந்த வழிகளைக் கொண்டு எனது திறமையை வளர்த்துக்கொள்வேன். இதை இப்படி சாதித்துக் காட்டுவேன் என்று முடிவெடுப்பதுதான் தன்னம்பிக்கை!

சிலர் சொல்வார்கள், தனக்கு திறமை இருக்கிறது என்று மற்றவர்கள்தான் கூற வேண்டுமே தவிர, தானே சொல்லிக்கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், ஒருவனுடைய பெருமைகளைத்தான் மற்றவர்கள் பேச வேண்டுமே தவிர, அவனுடைய திறமைகளை மற்றவர்கள் பேசக்கூடாது. அப்படிப் பேசவும் முடியாது! ஏனென்றால் மற்றவர்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியாததற்குப் பெயர்தான் திறமை. அதுதான் தன்னம்பிக்கை! ஒருவனுடைய தன்னம்பிக்கையை பிறரால் அறிந்துகொள்ள மட்டுமே முடியும். அப்படி பிறர் அறிந்துகொள்ள வேண்டுமானால், அங்கே ஒரு செயல் நடைபெற வேண்டும். அந்த செயலை நடத்திக் காட்டுவதுதான் தன்னம்பிக்கை! இதை இவன்தான் செய்தானா? அல்லது இதை இப்படிக் கூட செய்ய முடியுமா? என்ற வியப்பு எங்கே தோன்றுகிறதோ அதுதான் தன்னம்பிக்கை!

"உனக்கு திறமை இருக்கிறது, ஆனால் உனது தலைக்கனம் அதை அழித்து விடும்" என்று யாராவது உங்களை பார்த்து சொன்னால், அவர்கள் உங்களது திறமையைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார்கள் என்றுதான் பொருள்! எனவே உங்களுக்கு திறமை இருப்பது உண்மையானால் அப்படிப்பட்டவர்களிடம் மட்டும் பணிந்து சென்று விடாதீர்கள்! ஏனென்றால் தன்னம்பிக்கை என்பது முட்டாள்களின் எதிரி! எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் முட்டாள்களிடம் மட்டும் பணிந்து சென்று விடாதீர்கள்! அவர்களுக்கு தன்னம்பிக்கை என்றாலும் என்னவென்று தெரியாது, தலைக்கணமும் என்னவென்று தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை திறமைசாலிகளை அடக்க வேண்டும். திறமைசாலிகளோடு மோதிப்பார்க்க முடியாது. எனவே அமைதிப்படுத்தவே முயற்சிப்பார்கள். அதற்காகவே தற்பெருமை, ஆணவம், திமிர் என்றெல்லாம் பட்டியல் தயாரிப்பார்கள்!

வெறுமனே மற்றவர்கள் பாராட்டுவதால் ஒருபோதும் உங்களுக்கு தன்னம்பிக்கை வளராது. நீங்கள் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து ஏதாவது ஒன்றை சாதித்துக் காட்டும்  போதுதான் பாராட்டு என்பது வெளியில் வரும். அப்படியானால் பாராட்டு என்பது தன்னம்பிக்கைக்கு அடிமை! எனவே மற்றவர்களின் பாராட்டை கண்டு நீங்கள் ஒருபோதும் மயக்கம் கொள்ளாதீர்கள்! அதே நேரத்தில், யாரும் பாராட்டவில்லையே என்று தயக்கமும் கொள்ளாதீர்கள்!

என்னைப் பொறுத்தவரையில், மற்றவர்களின் புகழ்ச்சிக்கு நான் ஒருபோதும் மயங்கியது இல்லை, ஏனென்றால் நான் ஒன்றை செய்கிறேன் அல்லது சொல்கிறேன் என்றால் அது மற்றவர்களால் விரும்பி ரசிக்கப்படுமா? அல்லது எனக்கு எதிராக விமர்சிக்கப்படுமா? என்று தெரிந்துதான் அதை செய்வேன். இதை சொன்னால் இதுதான் விளைவு என்று தெரியாமல் நான் எதையும் செய்ததில்லை. தெரிந்தே செய்யும்போது அதன் விளைவுகள் என்னை எந்த விதத்திலும் பாதித்ததும் இல்லை!. அது வெற்றியாக இருந்தாலு சரி, தோல்வியாக இருந்தாலும் சரி.

ஏனென்றால் எதிர்பாராமல் நடக்கும் செயலைக் கண்டுதான் ஒருவன் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைவான். ஆனால், இதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துவிட்டால், அது நடக்கும்போது நமக்கு எந்த வித சலனமும் இருக்காது. ஆனால் அதைக் கண்டு மற்றவர்கள் சலனம் கொள்வார்கள். அந்த சலனத்தை உண்டாக்குவதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை! ஏனென்றால் தன்னம்பிக்கை என்பது தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஆற்றல்! அதை நாம்தான் மற்றவர்களுக்கு உணர வைக்க முடியுமே தவிர. நமக்கு யாரும் உணர்த்த முடியாது! ஒரு தன்னம்பிக்கையாளனின் திறமையை மற்றவர்களால் ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால் உங்களால் மட்டும்தான் பிறருக்கு உணர்த்த முடியும்! உங்களால் மட்டும்தான் அதை செயல்படுத்தவும் முடியும்!

தன்னம்பிக்கை, முயற்சி, என்றெல்லாம் வாய்கிழிய பேசுபவர்கள், அந்தத் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து MBBS படிக்காமல் ஒருவன் மருத்துவராக முடியுமா?... உடனே "போலி மருத்துவர்" என்று கைது செய்ய வருவார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்தால்தான் ஒருவனுடைய திறமையை நம்புவார்களே தவிர, தானாக உணரும் சக்தி அவர்களுக்குக் கிடையாது!!

மேலும், திறமை உள்ளவர்களுக்கு ஆணவம் கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஆனால் திறமை இல்லாதவர்களுக்கு ஆணவம் இருக்கலாமா? உதாரணமாக நீங்கள் எதையாவது புதிதாக சொல்லிப்பாருங்கள். அதை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆதாரம் இருக்கிறதா? நிரூபித்துக் காட்ட முடியுமா? இது எங்கு சொல்லப் பட்டிருக்கிறது? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள்தான் கேட்பார்கள். அந்த ஆதாரத்தையும் நாம்தான் சொல்ல வேண்டுமே தவிர, அவர்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று முயற்சிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரையில் ஏற்கெனவே யாராவது சொல்லியிருக்க வேண்டும். அல்லது யாராவது அங்கீகாரம் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை என்பது சுய சிந்தனையால் உருவாவது. நீங்கள் செய்யும் செயல் என்பது தனிப்பட்ட முறையில் உங்களால் நிகழ்த்தப்படுவது. எனவே இதற்கு நீங்கள்தான் அங்கீகாரம்!

ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் உன்னிடம் ஆணவமாக, திமிராக கேள்வி கேட்கும்போது, சுய சிந்தனையால் புதிதாக ஒன்றை செய்து காட்டும் தன்னம்பிக்கையாளர்கள் ஏன் திமிராக நடந்து கொள்ளக் கூடாது? உங்கள் திறமையைப் பார்த்து மற்றவர்களுக்கே உற்சாகம் வந்து விசில் அடித்து, கை தட்டி பாராட்டுகிறார்கள் என்றால், அதை செய்து காட்டிய நீங்கள் கொஞ்ச நேரம் குதித்தால்தான் என்ன? ஆனால் விட மாட்டார்கள்! அதை அவர்களால் தங்கிக் கொள்ளவும் முடியாது! ஏனென்றால் நீங்கள் ஆடத் தொடங்கினால் என்னாகும்? யாரெல்லாம் இதை முடியாது என்று சொன்னார்களோ அவர்களுடைய இயலாமை வெளியில் தெரிந்துவிடும் அல்லவா? எனவேதான் உங்களை அமைதிப்படுத்த முயற்சிப்பார்கள்! ஆனால், நீங்கள் தன்னம்பிக்கையாளனாக இருந்தால் ஒரு போதும் முட்டாள்களுக்கு மட்டும் அடங்கி நடந்து விடாதீர்கள்!

"இதை நான் செய்வேன்" என்பது தன்னம்பிக்கை என்றால், "இதை நான் செய்தேன்" என்பது மட்டும் எப்படி தலைக்கனமாகும்? எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியமே சொல்கிறது, கற்றவர்கள் முன்னிலையிலும், அரசர் சபையிலும் ஒருவன் தனது பெருமைகளை தானே சொல்லிக் கொள்ளலாம். என்று. ஆனால் முட்டாள்கள் மட்டும் அதை சொல்லக்கூடாது என்று சொன்னால் அதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

அதே நேரத்தில், அகந்தை என்பது கர்வம். இந்த 'கர்வம்'தான் ஒருவனுக்கு அவமானத்தை(அழிவை)த் தரும். ஆனால் இந்த அகந்தை என்பது "நான்" என்று சொல்வதைக் குறிக்காது. "நான் தான்" என்பதைத்தான் குறிக்கிறது. இரண்டும் ஒன்றுதானே என்று சிலர் கேட்கலாம், ஆனால் தமிழில் மட்டுமே இந்த நுண்ணிய அறிவு சார்ந்த சொற்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நான் என்பது "நான் செய்வேன்" என்பதை குறிக்கும். இது தன்னம்பிக்கை! ஆனால் "நான் தான் செய்வேன்" என்று சொன்னால் "என்னால் மட்டுமே முடியும் மற்றவரால் முடியாது" என்று பொருள். இதுதான் அகந்தை!

உதாரணமாக, நீங்கள் எதையாவது பேசிக் கொண்டிருக்கும் போது, உங்கள் வீட்டில் உள்ள வயதான பெரியவர்கள் "தான்தோன்றித் தனமாகப் பேசாதே" என்று சொல்லக் கேட்டிருக்கலாம். இந்த வார்த்தையை நுண்ணிய அறிவைக் கொண்டு கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது "நான் செய்வேன்" என்ற தன்னம்பிக்கையில் "தான்" என்ற வார்த்தை தோன்றி விட்டால் "நான் தான் செய்வேன்" என்று திரிந்து விடும். எனவே அவ்வாறு பேசினால் இன்னொருவர் அதை செய்து காட்டும்போது, நம்மால் மட்டுமே முடியும் என்று சொன்னது முறியடிக்கப்பட்டு நமக்கு அவமானம் ஏற்படும். அதனால்தான் 'தான்தோன்றித் தனமாகப் பேசாதே!' என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் "இதை நான் செய்தேன்" என்று சொல்லிக்கொள்வது எந்த விதத்திலும் தவறாகாது!

அதே நேரத்தில், முயற்சி, தன்னம்பிக்கை இவை இரண்டிற்கும் உதாரணமாக அனைவரும் கூறுவது "கஜினி முகம்மது" மற்றும் "சிலந்தி" தான். சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது அவசியமானதுதான். இதைத்தான் தன்னம்பிக்கை என்றும் சொல்வதுண்டு. தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யும் அனைவரும் தங்களது இலக்கை அடைய முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், முயற்சி என்பதை சிலர் தவறாகத்தான் அர்த்தம் கொள்கிறார்கள். அதனால்தான் கஜினி முகம்மதுவையும், சிலந்தியையும் முயற்சிக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

இப்படி நம்மால் சொல்லப்படும் தவறான எடுத்துக்காட்டுகளால் பலர் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடுவதும் உண்டு. ஏனென்றால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைதான் இதற்கு முக்கிய காரணம். கண்மூடித்தனமான நம்பிக்கைகள் ஒரு சிலருக்கு வேண்டுமானால் கை கொடுக்கலாம் ஆனால் எல்லோருக்குமே அது வெற்றியைக் கொடுக்காது.

அப்படியானால், கஜினி முகம்மது பல முறை தோல்வி கண்டபோதும் தனது விடாமுயற்சியால் மீண்டும் மீண்டும் போருக்கு சென்று வெற்றியை அடைந்தாரே....? சிலந்தி வலை பின்னும்போது பல முறை கீழே விழுந்தும்கூட தனது விடா முயற்சியால் மீண்டும் மீண்டு சென்று வலையை கட்டி முடிக்கின்றதே....? இவை எல்லாம் உண்மை இல்லையா? என்று சிலர் கேட்கலாம்.

ஆனால், இங்கேதான் நாம் ஒரு விஷயத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும். சிலந்தி வலை கட்டுகிறது என்பதற்காக நாம் சேலை தைக்கப் பயன்படுத்தும் 'நூலை' சிலந்தியிடம் கொடுத்து வலை கட்ட சொன்னால் சிலந்தியால் வலையை கட்டிமுடிக்க முடியுமா? நிச்சயம் முடியாது! இதேபோல கஜினி முகம்மது தோல்வியடைந்தும் மனம் தளராமல் மீண்டும் போருக்கு சென்று வெற்றி பெற்றார் என்பதற்காக நீங்களோ அல்லது நானோ போருக்கு சென்றிருந்தால் என்னாகியிருக்கும்?

அதாவது, கஜினி முகம்மது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து போரில் வெற்றி பெற்றார் என்றால் கஜினி முகம்மதுக்கு "யுத்தம்" தெரியும்! அதனால் அவருடைய முயற்சி அவருக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. அதேபோலவே சிலந்திக்கும் வலை கட்டத்தெரியம். அதனால் சிலந்தி மீண்டும் மீண்டும் முயன்று வலையை கட்டி முடிக்கின்றது! எனவே முயற்சி என்பதும் தன்னம்பிக்கை என்பதும் அனைவருக்கும் அவசியம்தான். ஆனால், எதற்காக முயற்சி செய்கின்றோமோ அதைப்பற்றிய அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொண்டு அதன்பிறகு முயற்சி செய்யவேண்டும். அப்போதுதான் நமது முயற்சி பயனுள்ளதாக அமையும்.

வாய்ப்பு யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம்! ஆனால், தகுதி உள்ளவர்களால் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும்! எனவே, ஒன்றுமே தெரியாமல், மற்றவர்கள் பாராட்டுகிறார்கள் என்பதற்காகவோ, காலம் கடந்துவிட்டது என்று மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் என்பதற்காகவோ ஆர்வக்கோளாறில் மேடையேறினாலோ, வெறும் ஆர்வத்தை மட்டும் நம்பி மீண்டும், மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தாலோ கீழே விழுவது மட்டுமல்ல... ஒரு நாளில் நமது வாழ்க்கையும் தொலைந்து போய்விடும்!

திறமையும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் ஒருங்கே பெற்றிருந்தால் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கலாம்! இதுதான் தன்னம்பிக்கை!!

- எழுத்ததிகாரன்
To a brave heart, Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

Message reputation : 100% (9 votes)
MODERATOR•••2
சிபத்ரா
சிபத்ரா
7/10/2017, 10:15 pm
தன்னம்பிக்கை உணர்வு ஊற்றேடுத்து பாயும் சிறந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும் என்று முயற்சி செய்வதும், காத்திருப்பதும் நம்பிக்கை. நமக்கான வாய்ப்பை நாமே உருவாக்கிக்கொள்வது தான் தன்னம்பிக்கை.

CREATE NEW TOPIC



Information

தன்னம்பிக்கை என்றால் என்ன?

From  » தமிழ் தகவல் களஞ்சியம் » பொது அறிவுக் களஞ்சியம்

Topic ID: 100

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...