Approved Admin•••1
TaCyclopedia
TaCyclopedia
17/11/2023, 5:01 pm
தமிழ் வார்த்தைகளின் வேறுபாடுகள்

இயக்குநர் / இயக்குனர் – வேறுபாடு:.

‘இயக்குநர்’ என்பதே சரி. வந்தனர், பாடினர், பேசினர், சென்றனர் என்ற இப்பதங்களில் வரும் ‘னர்’ பன்மையைக் குறிக்கும். ஆனால் ‘இயக்குநர்’ அப்படியல்ல. ஏவல் பொருளில் வரும் வினைச்சொல்லை பெயர்ச்சொல்லாக்குவதற்கு ‘நர்’ விகுதியைச் சேர்க்க வேண்டும். ஆக ‘இயக்கு+நர்’ என்பதுதான் சரி. பெறுநர், ஓட்டுநர் என்று இப்படி பற்பல சொற்களைச் சொல்லலாம்.

பத்திரிகை / பத்திரிக்கை – வேறுபாடு:

எனக்கும் இது தொடர்பாக ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இவ்விரண்டில் இதுதான் சரி என்று தீர்த்துக் கூறிவிட முடியாது என்பதே உண்மை. காரணம், இச்சொல் தமிழ்ச் சொல்லன்று, வடமொழிச் சொல். ஆக, தமிழ் மொழிச் சொற்களுக்கான நெறிமுறைகளோடு இச்சொல்லை நாம் அணுக முடியாது, கூடாது. ஆனால், ‘பத்திரிக்கை’ என்று ‘க்’ சேர்த்து எழுத வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். தமிழறிஞரான உ.வே.சாவும் கூட அவர் எழுதிய கட்டுரைகளில் பத்திரிகை என்றே பயன்படுத்தியிருக்கிறார். அதையும் கடந்து, என்னளவில் பத்திரிகை என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லைதான். தேவைக்கேற்ப செய்தித்தாள்/இதழ்/அழைப்பிதழ் (newspaper/magazine/invitation) என்று நற்றமிழ்ப் பதங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்தானே?

கறுப்பு / கருப்பு – வேறுபாடு:

நேரடியாக black எனும் பொருள் தரும் பதம் ‘கருப்பு’ தான். இதனால்தான் கார்வண்ணன், கருங்குழல், கரி, காரி போன்ற கரிய நிறத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் பதங்கள் இந்த எழுத்து முறைமையில் பயன்பாட்டில் உள்ளன. ‘கறுப்பு’ என்றால் நேரடிப்பொருள் – கடுங்கோபம், வெகுளி, வெறுப்பு. கறுத்தோர் என்றால் பகைவர் என்று பொருள். கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் என்கிறது தொல்காப்பியம். கறுப்பணசாமி என்று அழைத்தால் அதன் பொருள் அவர் கரிய நிறத்தவர் என்பது அல்ல; கடும் கோபக்காரர் என்பதே. ஆனால் இதே கறுப்பை நிற மாறுதலைக் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. ‘சினம் முற்றி முகம் கறுத்தான்’ என்போமே அதைப் போல. அங்கே முகம் கருப்பாக வேண்டும் என்றில்லை. சிவப்பானாலும் கூட அந்த நிற மாறுதலைக் குறிக்க கறுத்தல் என்றே அதைச் சொல்வோம். ஆக, கருப்பின் பொருள் ‘constant’. கறுப்பின் பொருள் இடத்தின் அடிப்படையில் மாறக்கூடிய ‘variable’.

கட்டடம் / கட்டிடம் – வேறுபாடு:

இரண்டுமே சரிதான். பொருள்தான் வேறு. கட்டு+இடம்தான் கட்டிடம். அதாவது, கட்டுவதற்கு உகந்த இடம் – building site. அதன்மீது அடுக்கடுக்காகக் கட்டி எழுப்பப்படும் building தான் கட்டடம். எங்கே நமக்கு எந்தப் பொருளில் வேண்டுமோ அந்தச் சொல்லை இனி சரியாகத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.

யான் / யாம் – வேறுபாடு:

‘யாம்’ என்பதையே பலரும் இங்கே ஒருமை (singular) என்றே கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் ‘யாம்’ என்பது பன்மைதான் (plural). ‘யான்’ என்பதன் பன்மை. அதனால்தான் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கிறார் திருமூலர். ஆனால், பாரதி ‘யாம் அறிந்த மொழிகளிலே’ என்றுதானே எழுதினார் என்று நீங்கள் கேட்கலாம். பாரதி பயன்படுத்தியிருக்கும் ‘யாம்’ – ROYAL ‘we’ அதாவது அரச பதவியில் இருக்கும் தனி நபரையோ மத குருமார்களையோ பெருமதிப்பிற்கு உரியவர்களையோ மரியாதையின் வெளிப்பாடாக பன்மையில் குறிப்பது. ஆக, எப்பொழுதும் ஞானச் செருக்கோடிருந்த பாரதி தன்னைத் தானே உயர்த்தி அவ்விதம் கூறியதில் வியப்பொன்றுமில்லை. அது தவறுமில்லை. ‘யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்’ என்கிறார் தொல்காப்பியர். ‘நான்’ என்ற பதம் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். பிற்காலத்தில் சங்க இலக்கியங்களில்தான் ‘நான்’ என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ‘அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்’ என்கிறது பரிபாடல்.

நாம் / யாம் – வேறுபாடு:

இதில் ‘நாம்’ என்பது தன்மையோடு முன்னிருந்து கேட்பவரையும் உட்படுத்துவதும் தன்மைப் பன்மை. எ.கா – ‘நாம் போய் வருவோம்’ – நானும் நீயும் போய் வருவோம் என்று பொருள். நீயும் என்று முன்னிருப்பவரையும் சேர்த்துக்கொள்வதால் இது Inclusive plural. ஆனால், ‘யாம்’ என்பது முன்னிருந்து கேட்பவரை உட்படுத்தாதது. எ.கா – ‘யாம் போய் வருவோம்’ – என்றால் நாங்கள் போய் வருவோம் என்றுதான் பொருள். அதாவது சொல்பவரும் அவரைச் சார்ந்தவரும் மட்டும் – முன்னிருந்து கேட்பவரைச் சேர்க்காமல் வருவதால் இது Exclusive plural.

தேநீர் / தேனீர் – வேறுபாடு:

இரண்டுமே சரிதான். பொருள் வேறு. தே+நீர்- தேநீர். ஆக தேயிலை நீர் (Tea) என்பது தேநீர்தான். தேன்+நீர் – தேனீர் (தேன் கலந்த நீர்).

நினைவு / நனவு – வேறுபாடு:

இச்சொற்களைப் பயன்படுத்துவதிலும் பொதுவாகவே இங்கே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. ‘We will make your dreams come true’ என்று பொருள்படும்படி எழுதவேண்டும் என்றால் அதற்கு ‘உங்கள் கனவுகளை நினைவாக்குவோம்’ என்று எழுதக்கூடாது. நினைவு என்றால் Thought/Memory. ஒன்றை மெய்ப்பித்தல்/உண்மையாக்குதல் என்ற பொருளில் சொல்லவேண்டுமென்றால் ‘நனவாக்குவோம்’ என்றுதான் சொல்ல வேண்டும். நனவு என்றால்தான் reality என்று பொருள். ஆக, ‘உங்கள் கனவுகளை நனவாக்குவோம்’ என்று எழுதுவதே ஏற்புடையது.

ஓர் / ஒரு – வேறுபாடு:

உயிரெழுத்திற்கு முன்புதான் ‘ஓர்’ என்று எழுதவேண்டும். மற்ற இடங்களில் ‘ஒரு’ என்றுதான் வரும். ஆக, ‘ஓர் இரவு நேரத்தில்’ என்று எழுதலாம். அதுவே மாலைப் பொழுதைக் குறித்து எழுதுமிடத்த்தில் ‘ஒரு மாலைப் பொழுதில்’ என்று எழுதுவதே சரி.

பேர் / பெரிய – வேறுபாடு:

உயிரெழுத்திற்கு முன்னர் ‘பேர்’ என்றும் மற்ற இடங்களில் ‘பெரிய’ என்றும் எழுத வேண்டும். இதனால்தான் பேராபத்து, பேரவை, பேரணி என்று எழுதுகிறோம் (பேர்+ஆபத்து, பேர்+அவை, பேர்+அணி). அதே நேரத்தில் புராணம் என்று வந்தால் அங்கே பேர்புராணம் என்று எழுதுவது பிழை என்பதால் பெரியபுராணம் என்றும் எழுதுகிறோம். பெரிய குளம் , பெரிய கருப்பன், பேரரசன், பேரிடர், பேரிணக்கம், பேரியக்கம், பேருவகை என்றெல்லாம் எழுதுவதன் பின்னால் இருக்கும் உத்தி இதுவே.

CREATE NEW TOPIC



Information

தமிழ் வார்த்தைகளின் வேறுபாடுகள்

From  » Home » தமிழ் கருத்துக்களம்

Topic ID: 2007

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...