காலைல செல்போன்லருந்து விநோதமான அலாரம் அடிச்சது.. என்னடான்னு பாத்தா படத்துலருக்கற மாதிரி ஒரு உருவம் போனுக்குள்ளருந்து வந்திச்சு. நான் பயந்து நடுங்கி யார் நீன்னு கேட்டேன்..
அம்பது நாள்ல இந்தியாவை மாத்திக் காட்டறேன்னு மோடிஜி சொன்னாருல்ல- அப்படின்னு அது கேட்டுச்சு..
ஆமான்னு மண்டைய ஆட்டினேன்..
அந்த வாக்குறுதிய நிறைவேத்தறதுக்காக என்னை அனுப்பியிருக்காரு.. என் பேரு டிஜிட்டல் குட்டிச் சாத்தான்னுச்சு... நீங்க கேக்கறதையெல்லாம் கொடுப்பேன்னுச்சு...
நான் நம்பிக்கையில்லாம, ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வான்னு சொன்னேன்.. கொண்டு வந்துச்சு.. குடிச்சுப் பாத்தா தேனு! என்னப்பா தண்ணி கேட்டா தேன் குடுக்கறியேன்னேன். பாத்ரூம் கொழாயைத் தொறந்தா பாலு வரும்.. சமையல் ரூம் கொழாயைத் தெறந்தா தேனு வரும்.. இன்னைலருந்து ஆறு குளம் கெணறு குட்டை எல்லாத்துலயும் தேனும் பாலுந்தான்.. எங்கியுமே தண்ணியில்லன்னுச்சு.
என்னடா வம்பா போச்சுன்னு நெனைச்சுக்கிட்டு ஒரு டீயும் தந்தி பேப்பரும் வாங்கிட்டு வான்னு அனுப்பினேன். அது கொண்டாந்து கொடுத்தது நியூயார்க் டைம்ஸ்சும், இத்தாலியன் காபியும்.
என்னடா கண்ணு மாத்தி வாங்கிட்டு வந்துட்டியேன்னு கேட்டேன்.. இனிமே லோக்கல் ஐட்டம் எதுவும் இந்தியாவுல கெடைக்காதுன்னுச்சு. ஒண்ணும் புரியாம தந்தி டி.வி.யப் போட்டா அங்க பாண்டேவுக்கு பதிலா ஓப்ரா ஒக்காந்து பேசிட்டிருக்கு..
நியூஸ்ல பாக்கறேன்.. போயஸ் கார்டன்ல ஹிலாரி கிளிண்டன் இருக்குதாமா.. என்னப்பா இதுன்னேன், இனிமே அவங்கதான் சின்னம்மானுச்சு.
அதிர்ச்சி கொறையறதுக்குள்ள வீட்டுக்கு வெளிய எட்டிப்பாருங்கன்னுச்சு..
எட்டிப் பாத்தேன். ரோல் ஸ்ராய்ஸ் காரும், ஹார்டலி டேவிட்சன் பைக்கும் நிக்குது. உங்க டப்பா வண்டிகளைத்தான் மோடிஜி இப்பிடி மாத்திட்டாரு - டிஜிட்டல் சாத்தன் சிரிச்சுக்கிட்டே சொல்லுது.
சும்மா சொல்லப்படாது... அம்பத்தாறு இஞ்சு கொண்டவரு அம்பதாவது நாள்ல்ல அட்டகாசமாத்தான் மாத்தியிருக்காருன்னு நெனைச்சுக்கிட்டு அட்டையைக் குடுத்து ஏ.டி.எம்ல போய் பணம் எடுத்துட்டு வான்னு தாட்டி உட்டேன்.
தலையைக் குனிஞ்சக்கிட்டு திரும்பி வந்து ஏ.டி.எம்ல பணமில்லைன்னுச்சு.
சரி போய் பெட்ரோல் வாங்கிட்டு வாடா செல்லம்ன்னு அனுப்பியிருக்கேன்.. கேனைத் தூக்கிட்டு போயிருக்கு!
-கவிதா பாரதி