NewMember•••1
Dharani
Dharani
31/12/2016, 5:20 pm
சென்னை: இன்று அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா.. அடுத்ததாக முதல்வராகிறார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே டிசம்பர் 30-ல் தான் ஜெயலலிதாவால் "துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது' என பொதுக்குழுவில் எச்சரிக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவும் அவரது மன்னார்குடி கோஷ்டியும்.

2011-ம் ஆண்டு சசிகலா, அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து கட்டம் கட்டி தூக்கியடித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் டிசம்பர் 30-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியது இதுதான்:

அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு, கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர், அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர்.

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது! சசி கோஷ்டியை வார்னிங் செய்த ஜெ. Jaya11

இப்படியும் முடிவு:

அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர்.

பழிவாங்குவோம்னு மிரட்டல்:

தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம்' என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள்.

துரோகிகளுக்கு மன்னிப்பே இல்லை:

இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது.
இவ்வாறு ஜெயலலிதா எச்சரித்திருந்தார்.

முதல்வர் சசிகலா:

ஆனால் நிகழ்வுகள் இப்போது தலைகீழாகி விட்டது! முதல்வர் பதவியை நோக்கிய பயணத்தில் மும்முரமாக இருக்கிறார் சசிகலா!!

NewMember•••2
Dharani
Dharani
31/12/2016, 5:21 pm
சென்னை: அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் அதிமுக இருக்கும், செங்கோட்டையிலும் அதிமுக கொடி பறக்கும் என கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியது:

"கடந்த ஆண்டு இதே டிசம்பர்த் திங்களில் கழகத்தின் வெற்றிக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி உரைக்கும் இவ்வேளையில் இந்தத் தாய் இட்ட கட்டளையை தலை மேல் சுமந்து ஓடிக் களைத்து உறக்கமின்றி உழைத்து சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம் இமாலய வெற்றியை ஈட்டுவதற்கும் ஆறாவது முறையாக, தமிழகத்தின் ஆட்சி அரியணையில் கழகத்தை அமர்த்துவதற்கும் அயராது பாடுபட்ட என் பாசமுடைய கழக உடன்பிறப்புகளான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் தயவுமின்றி:

யார் தயவின்றியும், எத்தகைய ஊன்றுகோல் உதவி இல்லாமலும், ஓடிச் சென்று தங்கப் பதக்கத்தை தட்டிப் பறிக்கிற திராணியும், திடமும் கொண்ட ஒரே இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த உலகிற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திட்டமிட்ட பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். மொழிக்கொரு சங்கம் கண்டு மூவாப் புகழ் படைத்த மூதூர் மதுரையில் நின்றுகொண்டு அன்று நான் சொன்னது போல உன்னதமான உழைப்பை நீங்கள் கொடுங்கள், கூட்டணியையும், தேர்தலுக்கான திட்டமிடலையும் நான் செய்து முடிக்கிறேன்; என் கணக்கு ஒரு போதும் தப்பாது என்று அப்போது சொன்னது இப்போதும் நிறைவேறி இருக்கிறது. உங்களின் தூய்மையான உழைப்பும் அன்பும் எனக்கு எந்நாளும் துணை இருக்கும் போது, இனி எப்போதும் நிறைவேறும். கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்க துல்லியமான செயல் திட்டங்களையும், நாம் வகுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் குறையாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் கழகக் கண்மணிகளாகிய உங்களின் தலையாய பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை:

மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நம்மை நடத்தும் நடுநிலை இல்லாத நடுவண் அரசின் பாரபட்சம் மறுபக்கம். இவற்றிற்கிடையே தான், நம்மிடமிருந்து பேரார்வத்தோடு நிறையவே எதிர்பார்க்கும் தமிழக மக்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்க வேண்டிய சவாலும், போராட்டமும் நம் முன்னே நிற்கிறது. கல்லில் இருந்து அவசியமற்ற பகுதிகளை, கழிவுகளை அகற்றிட அகற்றிட உள்ளிருந்து ஒரு தெய்வச் சிலை பிறக்கிறது! அப்படிப் பிறக்கும் அந்த முழு உருவச் சிலைக்கு கண் திறக்கிற போது, அந்த சிலையை செதுக்கும் சிற்பியின் உளியும், அவரது விழியும் எத்தகைய கவனத்தோடு இருக்குமோ, அத்தகைய கவனத்தோடு தான் இன்றைக்கு தமிழகத்தின் அரசாட்சியை நான் நடத்தி வருகிறேன் என்பதை என் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரு பரிசுத்தமான நிர்வாகத்திற்கு உரியவர்களான நம்மிடம் நமது பணிகளும், செயல்களும் பக்கத் துணையாகி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இனி எக்காலத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து ஆட்சியை ஒரு போதும் இனி எவராலும் பறிக்க முடியாது என்கிற வரலாற்றுப் புரட்சியை நாம் உருவாக்க முடியும்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துகிற காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. 'வாஜ்பாயை பிரதமராக்கியது அதிமுக'
'அனைத்திந்திய' என்றே துவங்கும் நம் இயக்கத்தின் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998-லேயே உருவாக்கினோம். அன்று வாஜ்பாயை பிரதமராக்கி பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது.

அடுத்த மத்திய அரசில் நாம் இருப்போம்!:

நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம். நாமும் இருப்போம் என்பது திண்ணம்.
நீங்கள் நினைக்கலாம்; பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டு காலம் இருக்கிறதே? அம்மா அதற்குள் நம்மை ஆயத்தப்படுத்துகிறாரே...? இப்போது தானே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்துவிடக் கூடாது.

ராக்ஃபெல்லர் கதை:

உலகத்தின் பெரும் பணக்காரரான ராக்ஃபெல்லர் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்தவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “எங்கே பயணம்?” எனக் கேட்டார். “தொழில் நிமித்தமாக லண்டன் போகிறேன்” என்றார் அவர். “உலகப் பணக்காரராகிவிட்டீர். ஓய்வெடுக்கக் கூடாதா? இன்னும் இப்படி உழைக்கிறீர்களே...?” என்று கேட்க, ராக்ஃபெல்லரோ “விமானம் ஓடுதளத்திலிருந்து உயரப் பறந்து இப்பொழுது தான் உச்சத்திற்கு வந்துவிட்டதே? அதனால் விமானத்தின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்திவிடலாமா?” என்று அவர் திருப்பிக் கேட்டாராம்.

அது போலத்தான் நமது வெற்றியை நாளை இந்த நாடே சொல்வதற்கான ஆயத்தப் பணிகளை நாம் இப்போதே தொடங்கிவிட வேண்டும். தொடர்ந்துவிட வேண்டும். ஒரு மரத்தை வெட்டுவதற்கு பத்து மணி நேரமாகும் என்றால் அதில் ஒன்பது மணி நேரத்தை கோடாரியை கூர் படுத்துவதற்கே செலவு செய்வேன் என்று சொன்ன சாக்ரடீசின் கருத்தைத்தான் நான் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.

இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி நமக்கு சோர்வையோ, போதும் என்ற ஓய்வு மனப்பான்மையையோ தந்துவிடக் கூடாது. அடுத்த வெற்றிக்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும். ஆதலால், இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்து முடித்துவிட்டால் இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக, கையேந்திப் போராடுகிற, இது போன்ற நிலை நமக்கு ஒரு போதும் வராது.

செங்கோட்டையிலும் அதிமுக கொடி...
தீர்மானிக்கிற இடத்தில் நாம் இருப்போம். அப்படி இருக்கிற போது தேசத்தின் இறையாண்மை குலையாமலும்; தமிழகத்தின் உரிமைகள், உடமைகள் எதிலும் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமலும் முடிவெடுக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும். அந்த நிலை, அந்த அரசியல் பொற்காலம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமானால் என் அன்பிற்குரிய கழகக் கண்மணிகளும், உடன்பிறப்புகளும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

தீயசக்திகளின் கும்பலை எதிர்கொண்டு போராடுகிற நம் கழகத்தின் நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை இந்தத் தாய் அறியாமல் இல்லை.

அம்மாவாகிய நான்...:

உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவைகள் அறிந்து எப்படி அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி சரி செய்கிற சாமர்த்தியம் உங்கள் அம்மாவாகிய எனக்கு உண்டு என்பதை நீங்கள் பூரணமாக நம்பலாம். அதே வேளையில், இலை வெளியே தெரியும். பூ வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். கனி வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும். மரமும் வெளியே தெரியும். ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர்தான் கழகத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடித் தொண்டர்கள் என்பதை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

பொதுமக்களிடம் எளிமையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றோடு கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏறத்தாழ ஏழு மாதம் நிறைவுற்ற நிலையில் கருணாநிதி ஆட்சிக் காலத்திய எந்த ஆடம்பர விழாக்கள் போன்றோ தற்புகழ்ச்சி மாநாடுகள் போன்றோ எதனையும் நடத்தி அரசுப் பணத்தை, பொதுமக்களின் வரிப் பணத்தை வீணடிக்காமல் எப்படி எளிமையான அரசாங்கமாக, அதே நேரத்தில் வலிமையான வருங்காலத்தை தமிழக மக்களுக்கு அமைத்துத் தரும் அரசாக நம்முடைய கழக அரசு திகழ்கிறதோ அதனையே நீங்களும் பின்பற்ற வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கின்ற கடமையை அரசு அலுவலர்களோடு சேர்ந்து நாமும் செய்திட வேண்டும். கழக அரசுக்கு எவ்வகையிலும் அவப்பெயர் நேர்ந்துவிடக் கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாய் கடமை உணர்ச்சியோடு நாம் பணியாற்ற வேண்டும். அப்படி நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு மக்கள் சேவையை தூய தொண்டுள்ளத்தோடு செய்வோமேயானால் வருங்காலம் நமக்கு மேலும் மேலும் வசந்த காலமாகும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா...
இரட்டை இலை இங்கு மட்டுமல்ல, தமிழக எல்லை கடந்தும் துளிர்க்கும்; செழிக்கும்! ஒரு முறை மரங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆண்டவனிடம் மனு கொடுத்ததாம். அதில் “இறைவா எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கிற இரும்புக் கோடாரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே” என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம் “கோடாரி தயாரிப்பதை என்னிடம் நிறுத்தச் சொல்வதற்கு முன் நீங்கள் முதலில் அந்தக் கோடாரிகளுக்கு கைப்பிடியாக ஆவதை நிறுத்துங்கள். மரங்களாகிய உங்களிடமிருந்து தானே கூரிய கோடாரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன...?” என்ற போது தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நாம், நமக்கு துரோகம் செய்யாமல், ஒற்றுமையோடு நின்றோமானால், எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன், எப்படை வரினும் இப்படையே வெல்லும்," என்றார் ஜெயலலிதா.

NewMember•••3
Dharani
Dharani
31/12/2016, 5:23 pm
சென்னை: வெள்ளிக்கிழமை நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சொன்ன கதை:

"இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறு கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம்தான். சின்ன தவறுதான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும். சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது... என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள். 'எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்' என்றவன் வீட்டுக்கு வந்தான். விதிமுறைகளை மீறி அவன் இதுவரை எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை. முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது. காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. அவள் விளக்கம் கேட்பதற்குள் அவனே முந்திக்கொண்டான். சரி, இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான். 'இதை செய்வது சரியா அம்மா?' என்று கேட்டான். 'வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால் இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது. தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிற போதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்...' என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய்.

அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான். தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன. இந்தக் கதை போலத்தான் நாம் செய்யும் தவறு நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும். ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்," என்றார் ஜெயலலிதா. இந்தக் கதையை யாருக்காக 'அம்மா' சொல்கிறார் என்பது புரியாமல் அதிமுகவினர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டது தனிக் கதை!

•••4
Sponsored content

CREATE NEW TOPIC



Information

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது! சசி கோஷ்டியை வார்னிங் செய்த ஜெ.

From  » தமிழ் தகவல் களஞ்சியம் » தினசரி செய்திகள்

Topic ID: 437

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...